
கடவுளுடன் சூதாடுவது
பிசாசுகளுடன் சூதாடுவது போல்
சுவாரசியமாக இருப்பதில்லை
கடவுளுடன் சூதாடும் போது
பெறுவதற்கு
சொர்க்கம், நரகம்
சுகவாழ்வு என
ஏதாவது ஒன்று இருப்பதால்
நான் பதட்டமடைகிறேன்
சில நேரங்களில்
பகடையில் விழும் எண்ணிற்கு
மாறாக
காய்களை நகர்த்தி
கடவுளிடம் பிடிபட்டு
குற்றவுணார்விற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
ஆனால்
பிசாசுகளுடனான சூதாட்டத்தில்
இழப்பதற்கோ, பெறுவதற்கோ
நிபந்தனைகளோ
எதுவுமில்லை
நீங்கள் ஒரு முழுமையான
சூதாடியாக இருக்க வேண்டும்
என்பதை தவிர.
கடவுளுடனான உறவுகளும்
அசுவாரசியமானாவை தான்
கடவுள் நம்மை விட்டு விலகுவதுமில்லை
நம்மை கைவிடுவதுமில்லை
மேய்ப்பனைத் தொடரும்
ஆடுகள் போல் நாம் இருக்கலாம்
பிசாசுகளோ
துர்நாற்றம் வீசும்,
சாக்கடைகள் சுழிந்தோடும்
ஏதேனும் ஒரு சந்தில்
நம்மை விட்டு மறைந்து விடலாம்
எனவே நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
பிசாசுகளுடனான உறவில்
இத்தனை நன்மைகளும்
சுவாரசியங்களும் இருந்தும்,
அவையெல்லாம்
முடிவற்று , யுகயுகங்களாய்
தொடர்ந்து கொண்டிருப்பதுதான்
என்னை பயமுறுத்துகிறது.
உன் கவிதையை நான் வாசிக்க தூண்ட காரணமான வித்யாசமான கவிதை இது...hats off
ReplyDelete