Friday, May 7, 2010

அபத்தக் கவிதை - 1


ஒரு காரணம்
தேவைப்படுகிறது
நான் இறப்பதற்கு.

நீங்கள் என்னை
பைத்தியக்காரன் என்று நினைக்கலாம்.

இந்த காரணம் கூட
எனக்குப் போதுமானது தான்.
ஆனால்

என் இறப்பின்
காரணத்தைப் பற்றி
அக்கறை கொள்பவர்கள்
அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

என் இறப்பு உருவாக்கும்
வெற்றிடத்தை நிரப்ப
என்னளவு
எடையும் ,உயரமும்
கொண்ட ஒரு காரணம்
அவர்களுக்கு தேவைப்படலாம்.

மாலை நேரம்
பூங்காவில் நடப்பதைப் போலவோ
சாளரத்தின் வழியே
மழையை வேடிக்கைப் பார்ப்பது போலவோ
இறப்பை ஏற்றுக்கொள்ள
அவர்கள் மறுப்பது
ஆயாசம் தருவதாக இருக்கிறது.

(காரணங்கள் விற்கும்
கடை ஒன்று இருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்.)

அவர்கள் ஏற்றுக்கொள்ளும்
தகுந்த கன பரிமாணம் கொண்ட
ஒரு காரணம் கிடைக்கும் வரையாவது
நான் வாழ்ந்தாக வேண்டும்
என்பதுதான்
என் துரதிர்ஷ்டம்.

No comments:

Post a Comment