கணினித் திரையின் ஒளிப்புள்ளிகளில்
கவனம் குவியும்போது,
மாநகரப் பேருந்தின்
நெரிசல் பயணத்தின்போது ,
இப்படி ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
நினை விழைகள் அறுந்து
உரு கொள்கின்றன
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்
வெறுமை தான் என்றபோதும்
சுமக்க முடியாமல்
திணறுகின்றன மூளை செல்கள்
பேருந்தின் சாளரப் பரப்பில்
நகரும் காட்சிகள்,
அருகாமைப் பெண்ணின்
கூந்தல் வாசம்,
கடந்த காலத்தின் எச்சங்கள் ,
இப்படி எதை இட்டு
நிரப்புவது அதன் வெறுமையை..
பார்வை நிலைகுத்தி நிற்கிறது
சிந்தனை சுழல் ஓய்கிறது
முடிவின்மைக்கும் , எனக்குமான
இடைவெளியை நிரப்புகின்றன
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்.