Thursday, December 30, 2010

இரு வேறு உலகங்களில்
வசிப்பவர்கள் தான் நாம்.
எனினும்,
நான் உன்னை பின் தொடர்கிறேன்
எப்போதும்.

உன் வயலினில் இருந்து
வழியும் இசையுடன்
இணைந்திருக்கிறேன்.

உன் பேனாவிலிருந்து
வார்த்தைகளை
என் மீது தான் உதிர்க்கிறாய்

நீ சுயமுடன் இருந்தர்க்காக
புறக்கணிக்கப் பட்டபோது
உன்னுடனான என் இருப்பை நீ அறியவில்லை.....

உன் நண்பனுடனான
உரையாடலில் தனித்து வசிப்பதாய் கூறினாய்
என் இருப்பை அறியாமல்.....

உன் உடலின்
மிக அந்தரங்கமான
மச்சத்தை போன்றது
என் இருப்பு.....
-----------------
--------------------
இந்த குளியல் அறையில்
ஆடைகளற்ற உன் அழகில்
நிலை குத்தி நிற்கின்றன

என் விழிகள்,


திடுக்கிட்டு பார்க்கிறாய்,

யார் என்று கேட்கிறாய்,


ஓசைகளற்ற உலகில் வசிப்பவன்,

எப்படி சொல்வேன்

நான் யார் என்று..........

மழைத் துளி

எல்லோரும் பேசினார்கள்
மழைக்காலம் பற்றி ,
மழையின் தன்மை பற்றி,
அதன் பயன்பாடு பற்றி,

ஏனோ யாருக்கும் அக்கறை இல்லை

ஒவ்வொரு மழைத் துளியிலும்
சிறிதளவு வானம்
ஒட்டிக் கொண்டிருப்பதைப் பற்றி .....

மீதமிருப்பவை

நம்முடைய உறவில்
கடைசியில் மீதமிருப்பவை இவைதான் ;
கருணை முலாம் பூசப்பட்ட
அவமதிப்புகள் ,
காதலின் வேலைப்பாடமைந்த
துரோகங்கள் ,
அன்பின் சாரமழிந்த
வெற்றுச் சொற்கள் ,

நாம் இன்னும் சில காலம்
பழகியிருக்கலாம்
இவற்றையெல்லாம்
அப்புறப் படுத்துவதற்காகவாவது .

Friday, December 17, 2010

வேட்டை

எந்த கணத்திலும்
நீ
ஒரு கவிதையால்
வேட்டையாடப் படலாம்.

உன்னை வேட்டையாடப் போகும்
ஒரு கவிதையை எழுதுவதற்காக
நீ காத்திருக்கத் தேவையில்லை,
அது யாரோ ஒருவரால்
எழுதப்பட்டிருக்கலாம்
நேற்றோ அல்லது சில நூற்றாண்டுகளுக்கு முன்போ.

காகிதக் குவியல்களுக்கு
இடையில் பதுங்கிக் கிடக்கும்
அதன் இருப்பை
உன்னால் உணரமுடியும்.

ஒரு கவிதையின்
வேட்டை நிலத்திலிருந்து
உன்னால் ஒருபோதும்
தப்பிச்செல்ல முடியாது .

உனக்கிருக்கும்
ஒரே ஒரு சாத்தியமெல்லாம்

ஒரு கவிதையால்
நீ வேட்டையாடப் படுவதை
மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பதுதான்.

காமம் ஒரு சாத்தியக்கூறு.

முழுமையின் பிரவாகத்தில்
ஒரு புள்ளியை

தனக்குள்
புதைத்திருக்கும் ஒரு நொடிக்குள்

துவங்கி முடிந்து விடும்
வாழ்தலுக்கான சாத்தியக்கூறு.

ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்.

கணினித் திரையின் ஒளிப்புள்ளிகளில்
கவனம் குவியும்போது,

மாநகரப் பேருந்தின்
நெரிசல் பயணத்தின்போது ,

இப்படி ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
நினை விழைகள் அறுந்து
உரு கொள்கின்றன
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்

வெறுமை தான் என்றபோதும்
சுமக்க முடியாமல்
திணறுகின்றன மூளை செல்கள்

பேருந்தின் சாளரப் பரப்பில்
நகரும் காட்சிகள்,

அருகாமைப் பெண்ணின்
கூந்தல் வாசம்,

கடந்த காலத்தின் எச்சங்கள் ,

இப்படி எதை இட்டு
நிரப்புவது அதன் வெறுமையை..

பார்வை நிலைகுத்தி நிற்கிறது
சிந்தனை சுழல் ஓய்கிறது

முடிவின்மைக்கும் , எனக்குமான
இடைவெளியை நிரப்புகின்றன
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்.

வாழ்க்கை

நொடியில் தவறிவிடும் பேருந்து
கனவு முடியுமுன்
களைந்து விடும் தூக்கம்,
வேறொருவரின் கையில்
நாம் விரும்பிய பரிசுப்பொருள்,
எடுப்பதற்குள் ஓய்ந்து விடும்
அலைபேசியின் அழைப்பு,
நினைவுக்கு வருமுன்
போக்குவரத்தில் மறைந்து விடும்
எங்கேயோ பார்த்த முகம் ,

வாழ்க்கை தான் எவ்வளவு நிச்சயமற்றது !