உனக்கான
எனது காத்திருப்புகள்
பின்னிரவு விண்மீனின்
இடம்பெயர்வைப் போல்
யாருமறியாதவை.
நீ நடக்கும்
சாலை எங்கும்
மழையாய்,
மரமாய்,
மண் துகளாய்
யாதுமாகி வியாப்பித்திருக்கும்
என் காத்திருப்பின் தீவிரம்.
நீ கடந்து போன பின்னும்
வெயிலாய்,
பனியாய்
படர்ந்திருக்கும்
உன் நினைவுகளின் நீட்சி.
Monday, May 31, 2010
நீலுவுக்காக - 1
காலத்தின் பெரும்பரப்பில்
நிராகரிப்பின் சிலுவையை சுமக்கிறேன்
உன் வார்த்தைகளின் துணையோடு
உன் வார்த்தைகளோ
தீராத சலிப்பின் உச்சம்
மௌனம் பருகி
வார்த்தைகளின் தாகம் தீர்க்கிறேன்.
என் மௌனத்தை நிறைக்கிறது
சிலுவையில் அறையப்படும்
ஆணிகளின் ஓசை.
நிராகரிப்பின் சிலுவையை சுமக்கிறேன்
உன் வார்த்தைகளின் துணையோடு
உன் வார்த்தைகளோ
தீராத சலிப்பின் உச்சம்
மௌனம் பருகி
வார்த்தைகளின் தாகம் தீர்க்கிறேன்.
என் மௌனத்தை நிறைக்கிறது
சிலுவையில் அறையப்படும்
ஆணிகளின் ஓசை.
Tuesday, May 25, 2010
பிசாசுகளுடனான உறவு

கடவுளுடன் சூதாடுவது
பிசாசுகளுடன் சூதாடுவது போல்
சுவாரசியமாக இருப்பதில்லை
கடவுளுடன் சூதாடும் போது
பெறுவதற்கு
சொர்க்கம், நரகம்
சுகவாழ்வு என
ஏதாவது ஒன்று இருப்பதால்
நான் பதட்டமடைகிறேன்
சில நேரங்களில்
பகடையில் விழும் எண்ணிற்கு
மாறாக
காய்களை நகர்த்தி
கடவுளிடம் பிடிபட்டு
குற்றவுணார்விற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
ஆனால்
பிசாசுகளுடனான சூதாட்டத்தில்
இழப்பதற்கோ, பெறுவதற்கோ
நிபந்தனைகளோ
எதுவுமில்லை
நீங்கள் ஒரு முழுமையான
சூதாடியாக இருக்க வேண்டும்
என்பதை தவிர.
கடவுளுடனான உறவுகளும்
அசுவாரசியமானாவை தான்
கடவுள் நம்மை விட்டு விலகுவதுமில்லை
நம்மை கைவிடுவதுமில்லை
மேய்ப்பனைத் தொடரும்
ஆடுகள் போல் நாம் இருக்கலாம்
பிசாசுகளோ
துர்நாற்றம் வீசும்,
சாக்கடைகள் சுழிந்தோடும்
ஏதேனும் ஒரு சந்தில்
நம்மை விட்டு மறைந்து விடலாம்
எனவே நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
பிசாசுகளுடனான உறவில்
இத்தனை நன்மைகளும்
சுவாரசியங்களும் இருந்தும்,
அவையெல்லாம்
முடிவற்று , யுகயுகங்களாய்
தொடர்ந்து கொண்டிருப்பதுதான்
என்னை பயமுறுத்துகிறது.
Friday, May 7, 2010
அபத்தக் கவிதை - 1

ஒரு காரணம்
தேவைப்படுகிறது
நான் இறப்பதற்கு.
நீங்கள் என்னை
பைத்தியக்காரன் என்று நினைக்கலாம்.
இந்த காரணம் கூட
எனக்குப் போதுமானது தான்.
ஆனால்
என் இறப்பின்
காரணத்தைப் பற்றி
அக்கறை கொள்பவர்கள்
அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
என் இறப்பு உருவாக்கும்
வெற்றிடத்தை நிரப்ப
என்னளவு
எடையும் ,உயரமும்
கொண்ட ஒரு காரணம்
அவர்களுக்கு தேவைப்படலாம்.
மாலை நேரம்
பூங்காவில் நடப்பதைப் போலவோ
சாளரத்தின் வழியே
மழையை வேடிக்கைப் பார்ப்பது போலவோ
இறப்பை ஏற்றுக்கொள்ள
அவர்கள் மறுப்பது
ஆயாசம் தருவதாக இருக்கிறது.
(காரணங்கள் விற்கும்
கடை ஒன்று இருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்.)
அவர்கள் ஏற்றுக்கொள்ளும்
தகுந்த கன பரிமாணம் கொண்ட
ஒரு காரணம் கிடைக்கும் வரையாவது
நான் வாழ்ந்தாக வேண்டும்
என்பதுதான்
என் துரதிர்ஷ்டம்.
அபத்தக் கவிதை - 2

என் கவிதைகள்
உங்களுக்கானவை அல்ல.
நீங்கள்
என் கவிதைகளை
உரத்து படிக்கும் போது
நான் மூச்சந்தியில்
நிர்வாணமாய் நிற்பது போல் உணர்கிறேன்.
என் கவிதைகளை
நீங்கள் வாசிக்க விரும்பினால்
உங்கள் மனத்திற்கே தெரியாமல்
மிக அந்தரங்கமாக
மௌனத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள்.
என் கவிதைகள்
மிக பிரத்தியேகமாக,
என் வாழ்வின் சில கணங்களை உடைத்து
எனக்காக சேகரிக்கப்பட்ட ஏதோ ஒன்று.
என் கவிதைகளை
நீங்கள் படிப்பது
என்னுடன் புணர்வது போல தான்.
என் கவிதைகள்
உங்களில்
மனமுவந்த புணர்ச்சியின்
உச்சத்தை உருவாக்கலாம்.
அல்லது
உங்கள் மேல்
எதிர்பாராமல் தெறிக்கும்
ஆண் குறியின் உவர்ந்த கசிவைப் போல்
திடுக்கிடலைஉருவாக்கலாம்.
ஆகவே தான் சொல்கிறேன்
என் கவிதைகள்
உங்களுக்கானவை அல்ல.
Subscribe to:
Posts (Atom)